Azhvaar – 3

ஜனவரி 11, 2009

2:4 முதலாழ்வார்கள்:

செய்யதுலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தான் வாழியே
வையந்தகளி நூறும் வ
குத்துரைத்தான் வாழியே
வசனமலர்க் கருவதனில் வந்தமர்ந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நன்மலரோன் வாழியே
நல்ல திருக் கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரி இட்டான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழுரைப்பான் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே

திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே
ருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைக்கழியில் நின்றசெல்வன் வாழியே
நேமிசங்கள் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருந்தலத்தில் வாழியே

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரையும் முதலாழ்வார்கள் என்று போற்றுகின்றனர். பொய்கையாழ்வார் தொண்டை நாட்டில் காஞ்சீபுரத்திற்கு அருகிலுள்ள திருவேக்காவில் ஐப்பசி திருவோண நன்னாளில் அவதரித்தார். இவரைத் திருச்சங்கின் மருவுருவகாக் கொள்வர். ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் பிறந்ததால் பொய்கையார் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவார். வாழ்விற்கு அவர் விரும்பும் இயல்பான குணங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவை பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாமை, கீழோர் நட்பை விரும்பாமை, உயர்ந்தோரின் பழக்கம், திருமாலைத் தவிர பிற தெய்வங்களைப் புகழாமை என்பனவாம்,

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறென் நம்மேல் வினை.

பூதத்தாழ்வார் திருக்கடல் மல்லையில் ஐப்பசி அவிட்ட நன்னாளில் குருக்கத்தி மலரில் தோன்றினார். இவரை “கௌமோதகி” என்னும் கதாயுதத்தின் மருவுருவாகக் கொள்வர்.

பேயாழ்வார் சென்னைத் திருமயிலையில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கிணற்றில் ஐப்பசி சதய நன்னாளில் பிறந்தார். இவரை “நந்தகம்” என்னும் திருவாளின் மருவுருவாகக் கொள்வர்.

முதலாழ்வார்கள் மூவரும் தனித்தனியே ஓடித்திரியும் யோகியராக ஒருவரை ஒருவர் அறியாமல் வாழ்ந்து வந்தனர். உலக மக்கள் நல்வழி எய்தும் பொருட்டு இவர்களை ஒன்று சேர்க்க எண்ணிய இறைவன், ஆழ்வார்களின் மனத்தில் திருக்கொவிலூருக்குச் செல்லும் எண்ணத்தைத் தோற்றுவித்தான்.

முதலாழ்வார்கள் மூவரும் திருக்கோவிலூரில் பிருகண்டு குடிலின் இடைக்கழியில் சந்தித்துக்கொண்ட கதை வைணவப் பக்தி இயக்கத்தின் தத்துவத்தைக் குறியீடாக உணர்த்துகிறது. அவர்கள் இருந்த குறுகிய இடத்தில் இறைவனும் புகுந்தான். புதிய நெருக்கத்தை உணர்ந்த ஆழ்வார்கள் இரண்டு விளக்குகளை ஏற்றினர். ஒன்று புற விளக்கு. மற்றது அகவிளக்கு.

பொய்கையாழ்வார் ‘வையம் தகளியா’ எனத்தொடங்கி உலகை அகலாகவும், கடலை நெய்யாகவும் பகலவனைச் சுடராகவும் கொண்டு புற இருளை நீக்குவதற்காக ஒரு விளக்கை ஏற்றினர்.

வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய சுடரோன் விளக்காக – செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீக்குகவே என்று.

எனத் தொடங்கி நூறு பாடல்களை இயற்றினார். இவை முதல் திருவந்தாதி என்ற தொகுப்பாக அறியப்படுகிறது.

பூதத்தாழ்வார் அன்பை அகலாகவும் ஆர்வத்தை நெய்யாகவும் இன்புருகு சிந்தையை இடு திரியாகவும் கொண்டு அகவிருளை நீக்க ஒரு விளக்கை ஏற்றினார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.

எனத் தொடங்கி நூறு பாடல்கள் கொண்ட இரண்டாம் திருவந்தாதி என்ற தொகுப்பை இயற்றி அருளினார்.

பொய்கையார், பூதத்தாழ்வார் இருவரும் ஏற்றிய விளக்குகளால் புற இருளும் அக இருளும் நீங்கப்பெற்ற பேயாழ்வார் ‘தகவுரை’ கூறிச் செதணனை எம்பெருமானிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவளுடைய சேர்க்கையாலே நிறம் பெற்ற திரு மேனியைக் கண்டேன்; சூரியனைப் போன்று அழகிய நிறத்தையும் கண்டேன்; போரில் சீரும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள வலம்புரிச் சங்கையும் சேவிக்கப் பெற்றேன் – என்கிறார்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் நிகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.

எனத் தொடங்கி மூன்றாம் திருவந்தாதியை அருளினார்.

முதலாழ்வார்கள் இறைவனின் திருநாமங்களைச் சொல்வதால் ஏற்படும் பெருமைகளைப் பற்றிப் பல பாசுரங்களில் எடுத்துரைத்துள்ளனர்.

நாவாயில் உண்டே நமோ நாராயணா என்று
ஒவாதுரைக்கும் உரையுண்டே

எனப் பொய்கையாரும்

ஞானத்தால் நன்குணர்ந்து நாராணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினான்

எனப் பூதத்தாழ்வாரும்

நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே

எனப்பேயாழ்வாரும் ஒரே கருத்தைப் பாடியுள்ளனர்.

பொய்கையாழ்வார் ‘ஒன்றும் மறந்தறியேன்‘ என்ற பாடலை அரங்கன் மீது பாடியுள்ளார். பூதத்தாழ்வார் பாடிய இரண்டாம் திருவந்தாதியில் நான்கு பாடல்களில் திருவரங்கன் மற்றும் திருவரங்கம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவரது நான்காம் பாடலில் அரங்கனை வழிபடுவோர்க்கே அமரர் உலகு கிட்டும் எனக் கூறியுள்ளார். பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் இரண்டு பாசுரங்களில் திருவரங்கனைப் பற்றிப் பாடியுள்ளார்.

Advertisements

AZHVAAR-2

ஜனவரி 11, 2009

2:1 நாதமுனிகள் தொகுப்புமுறை

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தை நாதமுனிகள் கீழ்க்கண்டவாறு தொகுத்துள்ளார்.

முதலாயிரம்

பிரபந்தம் பாடியவர் பாசுரத்தொகை
1. பெரியாழ்வார் திருமொழி பெரியாழ்வார் 473
2. திருப்பாவை ஆண்டாள் 30
3. நாச்சியார்திருமொழி ஆண்டாள் 143
4. பெருமாள் திருமொழி குலசேகராழ்வார் 105
5. திருச்சந்தவிருத்தம் திருமழிசையாழ்வார் 120
6. திருமாலை தொண்டரடிப்பொடியாழ்வார் 45
7. திருப்பள்ளிஎழுச்சி தொண்டரடிப்பொடியாழ்வார் 10
8. அமலனாதிபிரான் திருப்பாணாழ்வார் 11
—-
கூடுதல் 947
—-

இரண்டாமாயிரம்

1. பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் 1084
2. திருக்குறுந்தாண்டகம் திருமங்கையாழ்வார் 20
3. திருநெடுந்தாண்டகம் திருமங்கையாழ்வார் 30
—–
கூடுதல் 1134
——
மூன்றாமாயிரம்

1. திருவாய்மொழி நம்மாழ்வார் 1102

நான்காமாயிரம்

இயற்பா

1. முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் 100
2. இரண்டாம் திருவந்தாதி பூதத்தாழ்வார் 100
3. முதல் திருவந்தாதி பேயாழ்வார் 100
4. நான்முகன் திருவந்தாதி திருமழிசையாழ்வார் 96
5. திருவிருத்தம் நம்மாழ்வார் 100
6. திருவாசிரியம் நம்மாழ்வார் 7
7. பெரிய திருவந்தாதி நம்மாழ்வார் 87
8. திருவெழுகூற்றிருக்கை திருமங்கையாழ்வார் 1
9. சிறிய திருமடல் திருமங்கையாழ்வார் 1
10. பெரிய திருமடல் திருமங்கையாழ்வார் 1
——
593
——
பாசுரங்களின் கூடுதல் 3776
====

பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்ட பாசுரங்கள் 3776 எனினும் இவை நாலாயிரம் என்றே கொள்ளப்படுகிறது. பெரிய திருமடல் 78 பாடல்களாகவும் சிறிய திருமடல் 40 பாடல்களாகவும் கணக்கிடப்பட்டு, இராமானுச நூற்றந்தாதி 108 ஐயும் சேர்த்து 3774+78+40+108 ஆக நாலாயிரம் என்று கணக்கிடும் வழக்கம் பெரும்பாலான பதிப்புகளில் பின்பற்றப்படுகிறது.

2:2 உரையாசிரியர்கள்

இராமானுசர் காலம் வரை செவி வழியாகவே வந்த திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் இராமானுசர் காலத்தில் ‘வியாக்கியானம்’ என்னும் நூல் வடிவம் பெற்றது. இவை ஆறாயிரப்படி, ஒன்பதாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்தினான்காயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி என்னும் பெயர்களைப் பெற்றன. இந்த விளக்க நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும் பின் வருமாறு.
ஆறாயிரப்படி – இராமானுசர், திருக்குருகைப்பிறான் என்னும் சீடரைக் கொண்டு எழுதியது.
ஒன்பதாயிரப்படி – நஞ்சீயர்
பன்னீராயிரப்படி – வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர்
இருபத்தினான்காயிரப்படி – பெரிய வாச்சான் பிள்ளை
முப்பத்தாறாயிரப்படி (ஈடு) – வடக்குத் திருவீதிப்பிள்ளை

நம்பிள்ளை என்பவர் தனது காலட்சேபத்தில் முப்பத்தாறாயிரப்படியைத் தொடர்ந்து அருளிச்செய்து கொண்டிருந்ததால் இதனை “நம்பிள்ளை ஈடு” என்பர்.

2:3 தனியன்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடுவதற்கு முன் தனியன்களைப் பாடும் முறை உள்ளது. இவற்றுள் ஐந்து பொதுத்தனியங்கள் உள்ளன. முதல் தனியன் திருவரங்கன் மணவாள மாமுனிகளுக்குக் கொடுத்ததாகும். மணவாள மாமுனிகள் திருவரங்கம் திருக்கோயிலில் உள்ள கருட மண்டபத்தில் ஓராண்டு காலம் இசைச் சொற்பொழிவு ஆற்றினார். இதனைக்கேட்டு மகிழ்ந்த திருவரங்கன் சொற்பொழிவின் இடையே ஒரு சிறுவனாக வந்து மணவாள மாமுநிகளிடம் கொடுத்ததாக அறியப்படுகிறது. ஏனைய நன்கு தனியன்களுள் இரண்டும் மூன்றும் கூரத்தாழ்வான் இயற்றியவை. நான்காவது தனியன் ஆளவந்தாரும் ஐந்தாவது தனியன் பராசர பட்டரும் இயற்றியவை.

இவை தவிர ஒவ்வொரு ஆழ்வாரின் பாசுரத் தொகுப்பிற்கு முன்பாக தனியன்கள் உள்ளன. இந்தத் தனியன்கள் ஆழ்வார்களின் பெயர்கள், அவர்கள் இயற்றிய பிரபந்தங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறும் அவர்கள் இயற்றிய பாசுரங்களின் சிறப்பும் இனி இடம் பெறுகின்றன.


AZHVAAR – 1

ஜனவரி 8, 2009

ஆழ்வார்கள் கண்ட அரங்கன்

தமிழகத்தில் பக்தி இயக்கம் தழைத்தோங்க நாயன்மார்களின் பன்னிரு திருமுறைகளும், ஆழ்வார்களின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் பெரும் பங்காற்றின. பாடல்கள் மூலம் பக்தியை மக்களிடம் பரப்பித் தாமும் மகிழ்ந்து மக்களையும் மகிழ்வித்த ஆழ்வார்கள் பற்றியும், அவர்கள்தொண்டினையும் அவர்கள் அரங்கன் மீது பாடிய பாசுரங்களைப் பற்றியும் காண்போம்.

1. ஆழ்வார்கள்:

ஆழ்வார் என்ற சொல் வைணவ சமயத்தோடு தொடர்புடைய திருமாலைப் பற்றிப் பாடிப் பரவிய பன்னிரு அடியார்களைக் குறிக்கின்றது. ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு முன்னோர்கள் ‘ எம்பெருமானுடைய மங்கள குணங்களில் ஆழங்கால் படுபவர்கள்’ என்று அருளினார்கள். சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் ஆழ்வார் என்ற சொல்லுக்குப பகவத் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர் என்ற விளக்கமுள்ளது.

கம்பர்,

‘பாவகத் தால்தன் திருவவதாரம் பதிநொன்றென்றிப்
பூவதகத் தாரறி யாதவண் ணம்தன்னை யேபுகழ்ந்து
நாவகத் தாற்கவி யாயிரம் பாடி நயந்தளித்த
போவகத் தாற்கன்றி என்புறத்தார் செய்குற்றேவல்களே’

என்று இப்பெரு மக்களைப் போற்றியுள்ளார்.

இவர்களின் அவதார வைப்பு முறையை மணவாள மாமுனிகள்,

“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை
அய்யன் அருள்மாறன் சேரகுலர்கோன் – துய்யப்பட்ட
நாதன்அன் பர்தாள் தூளி நற்பாணன் நற்கலியன்
ஈதிவர்தோற் றத்தடைவாம் இங்கு”

என்று உபதேச ரத்னமாலையிகூறியுள்ளார்

1:1 ஆழ்வார்களின் காலம்

பன்னிரு ஆழ்வார்களும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். திரு மு ராகவையங்கார் ஆழ்வார்கள் ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தவர்கள் எனக் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டுள்ளார்.

1. பொய்கையாழ்வார் கி.பி. 460-540
2. பூதத்தாழ்வார் கி.பி. 460-540
3. பேயாழ்வார் கி.பி. 460-540
4. திருமழிசையாழ்வார் கி.பி.520-620
5. பெரியாழ்வார் கி.பி.700-785
6. திருமங்கையாழ்வார் கி.பி.710-790
7. ஆண்டாள் கி.பி.716-782
8. தொண்டரடிப்பொ டியாழ்வார் கி.பி.740-800
9. மதுரகவியாழ்வார் கி.பி.740-805
10. குலசேகராழ்வார் கி.பி.750-780
11. திருப்பாணாழ்வார் கி.பி.750-800
12. நம்மாழ்வார் கி.பி.765-800

ஆழ்வார்கள் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள் என்பது உறுதி என்று முனைவர் கமலக்கண்ணன் கூறுகிறார்.

ஆழ்வார்களின் காலம் இன்னும் அறுதியிட்டுக் கூற இயலாத ஒன்றாகவே உள்ளது. இவர்கள் பல்வேறு காலத்தில் தோன்றிப் பல்வேறு இனத்தவராக இருந்தாலும் இவர்களது குறிக்கோள் திருமாலைப் போற்றுவதே ஆகும்.

1.2 திவ்வியப்பிரபந்தம்

வையகமென் பொய்கைபூ தம்பே யாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவிகள்
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டுசித்தன்
பூங்கோதை தொண்டரடிப் போடிபா ணாழ்வார்
ஐயனருட் கலியனெதி ராசர் தம்மோ
டாறிருவர் ஒரொருவர் அவர்தாஞ் செய்த
துய்யதமி ழிருபத்து நான்கிற் பாட்டின்
தொகை நாலா யிரமுமடி யோங்கள் வாழ்வே

‘திவ்ய’ என்ற வடமொழிச் சொல்லுக்கு மேன்மை பெற்றது என்று பொருள். ஆழ்வார்களின் பாசுரத் தொகுப்பைத் திவ்வியப் பிரபந்தம் எனப்போற்றி வழங்குகின்றனர். இவை திராவிட வேதமாகக் கருதப்படுதின்றன.

வேதாந்த தேசிகன்

‘என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஓதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’

என்னும் பாசுரத்தால் திவ்வியப் பிரபந்தங்களைத் தெளிய ஓதிப் பொருள் புலப்படாத வேதப்பகுதிகளை நன்கு தெளிகின்றோம் என்றளுகின்றார்.


Hello world!

ஜனவரி 8, 2009

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!